தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, 17ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானின் நவம்பர் 25ஆம் தேதியும், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் 144, சத்தீஸ்கரில் 30 மற்றும் தெலங்கானாவில் 55 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், மற்றொரு முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மண் சிங், சச்சௌரா தொகுதியில் இருந்து போட்டிடுகிறார். ரகோகர் தொகுதியில் திக்விஜய் சிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங் நிறுத்தப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ள புத்னி தொகுதியில் விக்ரம் மஸ்தலை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில், துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ அவரது கோட்டையான அம்பிகாபூர் தொகுதியில் இருந்து களம் காண்கிறார். முதல்வர் பூபேஷ் பாகேல் படானில் இருந்து போட்டியிடவுள்ளார். சத்தீஸ்கரில் அறிவிக்கப்பட்ட 30 வேட்பாளர்களில் 14 பேர் எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தவிர, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், மூன்று பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான 55 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. கோடங்கல் தொகுதியில் அனுமுலா ரேவந்த் ரெட்டியும், ஹுசூர்நகர் தொகுதியில் உத்தம் குமார் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். தாசரி சீதக்கா, முலுகுவில் போட்டியிடுகிறார், மைனம்பள்ளி ரோஹித் ராவ் மேடக், மைனம்பள்ளி ஹனுமந்த் ராவ் மல்காஜ்கிரியில் போட்டியிடுகின்றனர்.
இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
+ There are no comments
Add yours