ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்று விட்டது. 29-ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களை குறி வைத்து அவர்களின் பெயர் கொண்டவர்கள் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் தேர்தலின்போது, வாக்காளர்கள் குழப்பம் அடைந்து, வாக்குகள் சிதறும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. இது பழங்காலத்து டெக்னிக் என்றாலும், இன்றளவும் உள்ளாட்சித் தேர்தல் முதற்கொண்டு மக்களவைத் தேர்தல் வரை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஆந்திராவும் விதிவிலக்கல்ல என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பிட்டாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.இந்நிலையில் அவரது பெயரில் மேலும் இருவர் பிட்டாபுரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுபோல் தாடேபல்லி கூடம் சட்டப்பேரவை தொகுதியில் ஜனசேனா வேட்பாளர் பாலிஷெட்டி ஸ்ரீநிவாஸ் வேட்பு தாக்கல் செய்துள்ளார். இதே பெயரில் நவ்ரங் காங்கிரஸ் கட்சி சார்பில் மற்றொரு வேட்பாளர்களத்தில் உள்ளார்.
கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் சட்டப்பேரவை தொகுதியில் ஒய்எஸ் ஆர்காங்கிரஸ் சார்பில் வல்லபனேனி வம்சி மோகன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தத் தொகுதியில் வல்லபனேனி மோகன் கிருஷ்ணா எனபவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
திருப்பூரு சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இவரை எதிர்த்து ஸ்ரீனு என்பவர் தேசிய ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஆவனிகட்டா சட்டப்பேரவை தொகுதியில் ஜனசேனா கட்சி வேட்பாளர் புத்த பிரசாத் களத்தில் உள்ளார்.
இவரை எதிர்த்து அதே புத்த பிரசாத் எனும் பெயரில் நவ்ரங் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். குடிவாடா சட்டப்பேரவை தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் கோடாலி நானி என்பவர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதே பெயரில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் மனு தாக்கல் செய்துள்ளார்
+ There are no comments
Add yours