ககன்யான் திட்டத்தில் நான்கு வீரர்கள் !

Spread the love

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு இன்று (பிப்.27) வருகை தந்த பிரதமர் மோடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி உள்ளிட்ட விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர். இவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இன்றைய விழாவில் இந்த நால்வருக்கும் மிஷன் லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த நால்வரும் சாதாரண மனிதர்கள் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கனவுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் போகும் நான்கு சக்திகள். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளிக்கு செல்கிறார். இந்த முறை நேரமும் நமதே, கவுண்டவுன் நமதே, ராக்கெட்டும் நமதே. இன்று இந்த 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு இந்தியாவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள்தான்.

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும், நிகழ்காலத்தை மட்டுமல்ல, அதன் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் வரையறுக்கும் சில தருணங்கள் உள்ளன. இன்று இந்தியாவிற்கு அது போன்ற ஒரு தருணம்.” இவ்வாறு பெருமிதம் தெரிவித்தார்.

ககன்யான் திட்டம்:

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டில் 4 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மீண்டும் அவர்கள் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் அழைத்து வருவது சவாலான பணியாகும். இதில் விண்கலத்தை எதிர்பாராத ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்காக பல்வேறுகட்ட பரிசோதனைகள் நடத்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டது.

ஏற்கெனவே விண்கலம் கீழிறங்கும்போது பாராசூட்கள் விரிதல் போன்ற சிறிய அளவிலான சோதனைகள் இஸ்ரோவால் நடத்தப்பட்டது. தொடர்ந்து மனிதர்களை சுமந்து செல்லும் ஆளில்லாத விண்கலத்தை 4 முறை விண்ணுக்கு அனுப்பி பத்திரமாக பூமிக்கு கொண்டுவரும் பரிசோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours