கவரிங் நகையை அமெரிக்க பெண்ணிடம் 6 கோடிக்கு விற்று மோசடி !

Spread the love

ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு நகை வியாபாரியும், அவரது மகனும் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.300 மதிப்புள்ள கவரிங் நகையை, ரூ. 6 கோடிக்கு விற்று மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் செரிஷ் நார்ட்ஜே. இவர், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த நகை வியாபாரி ராஜேந்திர சோனியிடம் நகை வாங்குவதை கடந்த 2022ம் ஆண்டு முதல் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த நகைக்கடையை ராஜேந்திர சோனியும், அவரது மகன் கவுரவ் சோனியும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர் அமெரிக்காவில் நடந்த நகை கண்காட்சியில் தனது நகைகளை காட்சிக்கு வைத்துள்ளார். அப்போது இவரது நகையை போலி என கூறி, கண்காட்சி நிர்வாகத்தினர் நிராகரித்தனர்.

இதனை அறிந்த அதிர்ச்சி அடைந்த செரிஷ் நார்ட்ஜே தனது நகையை ஆராய்ந்தபோது, ராஜேந்திர சோனி, கவுரவ் சோனி இருவரும் ரூ.300 மதிப்புள்ள வெள்ளி சங்கிலிகளை பாலிஷ் செய்து, முலாம் பூசி, போலி சான்றிதழ்களை இணைத்து, வைர கற்கள் பதிக்கப்பட்டது என கூறி, ரூ.6 கோடிக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த மே மாதம் ஜெய்ப்பூருக்கு வந்து போலி நகைகளை விற்றது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது அவர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து மனக் சவுக் காவல் நிலையத்தில் செரிஷ் நார்ட்ஜே புகார் அளித்தார்.

மேலும், இவர்களிடம் ஏற்கெனவே வாங்கிய நகைகளிலும் எடை குறைவு, காரட்டில் முறைகேடு போன்ற மோசடிகள் நடந்துள்ளதாக செரிஷ் நார்ட்ஜே குற்றம் சாட்டினார். போலீஸாரும் நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் ராஜேந்திர சோனி, கவுரவ் சோனி இருவரும் நகையை வலுக்கட்டாயமாக செரிஷ் நார்ட்ஜேவுக்கு விற்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த நகையை போலீஸார் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்ததில் அவை போலி நகை என தெரியவந்தது. இதையடுத்து கடந்த மே 18ம் தேதி ராஜேந்திர சோனி, கவுரவ் சோனி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை அறிந்த அவர்கள் இருவரும் தலைமறைவாகினர். இதற்கிடையே போலி நகைகளுக்கு விலை உயர்ந்த நகை என போலி சான்றிதழ் வழங்கிய நந்த் கிஷோர் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான ராஜேந்திர சோனி, கவுரவ் சோனி ஆகியோரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours