மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திகார் சிறையில் திங்கள்கிழமை சந்தித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் சந்தித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங், பின்னர் ஊடகங்களிடம் பேசுகையில், “நான் வருத்தமாக இருக்கிறேன். அவர் குற்றவாளி போல, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், குற்றவாளிகள் கூட அதிக வசதிகளைப் பெறுகிறார்கள்… அவர் என்ன தவறு செய்தார்? பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உருவாக்கினார், மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினார், பெண்களுக்கு இலவச பயணம் வழங்கினார், இது குற்றமா?” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கேள்வி எழுப்பினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சந்தீப் பதக் கூறுகையில், டெல்லி முதல்வர் ஒவ்வொரு வாரமும் 2 அமைச்சர்களை சந்தித்து அவர்களின் துறை மற்றும் அரசாங்கத்தில் நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு செய்வார் என்று கூறினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. தற்போது அவர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கே. கவிதாவுடன் அடுத்த தேதியில் ஆஜர்படுத்தப்படுவார்.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இ.டி-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கெஜ்ரிவாலின் மனுவுக்கு ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு இ.டி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் இ.டி-யால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த கெஜ்ரிவாலின் மனு ஏப்ரல் 29-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பிறகு, ஊடகங்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கூறுகையில், “நான் அவரிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் தன்னைப் பற்றி எதுவும் பேசவில்லை … பஞ்சாப் பற்றி அவர் என்னிடம் கேட்டார் – விவசாயிகள் எப்படி இருக்கிறார்கள், அறுவடை நன்றாக நடக்கிறதா, ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் மக்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறதா? …இதுதான் அவரது கவலை…
நான் அவரிடம் பஞ்சாப் பற்றி கூறியுள்ளேன்… நான் அஸ்ஸாமுக்கு சென்றேன் என்றும், பிரச்சாரத்திற்காக குஜராத் செல்கிறேன் என்றும் தெரிவித்தேன்” என்று பகவந்த் மான் கூறினார்.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு விடுத்துள்ள செய்தியில், “யாரும் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம், மக்களைப் பற்றி கவலைப்படுங்கள், அவர்களுக்காகப் பணியாற்றுங்கள்” என்று கூறியதாக, திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பிறகு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கூறினார்.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு ஆம் ஆத்மி கட்சியில் குழப்பம் ஏற்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், “ஆம் ஆத்மி கட்சி ஒரு ஒழுக்கமான குழு… கட்சி மிகவும் ஒழுக்கமானது.. நாங்கள் அனைவரும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் வலுவாக நிற்கிறோம்… அவர் சிறையிலிருந்து வெளியே வருவார். ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் போது ஆம் ஆத்மி ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று பகவந்த் மான் சிங் கூறினார்.
மேலும், விரைவில் டெல்லியில் பிரசாரம் செய்ய உள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours