ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற அவருக்கு, பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
ஜார்க்கண்ட் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஹேமந்த் சோரன் முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
முன்னதாக, ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டதால் சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரனுக்கு கடந்த வாரம் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். இந்த வழக்கில் ஹேமந்த்சோரன் குற்றவாளி அல்ல என்று நம்புவதற்கான காரணங்கள் இருப்பதாக கூறி அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம், முதல்வர் சம்பய் சோரன் இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. அதில், ஹேமந்த் சோரனை மீண்டும் சட்டப்பேரவை கட்சித் தலைவராக நியமிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல்வர் பதவியில் இருந்து விலகிய சம்பய் சோரன், மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதையடுத்து, உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரினார். இந்நிலையில், 3-வது முறையாக அவர் முதல்வராக பதவியேற்றுள்ளார். இதற்கு காங்கிரஸ், ஆர்ஜேடி போன்ற கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சம்பய் சோரனை முதல்வர் பதவியில் இருந்து மாற்றியதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
+ There are no comments
Add yours