இந்திய எல்லையை ஒட்டி சீனா தனது அதிநவீன போர் விமானங்களை அணிவகுத்திருக்கும் செயற்கைக்கோள் படங்கள், இந்தியா – சீனா எல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், சிக்கிம் மாநிலத்தின் இந்திய எல்லையில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள உயரமான திபெத்திய விமான தளத்தில் ஏராளமான ஜே-20 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சீனாவின் விமானப்படையில் மிகவும் மேம்பட்ட போர் விமானங்கள் இவையாகும்.
செயற்கைக்கோள் தயவில் பகிரப்பட்டிருக்கும் படங்கள், ஷிகாட்சே இரட்டைப் பயன்பாட்டு விமான நிலையத்தில் ஆறு ஜே-20 போர் விமானங்களைக் காட்டுகின்றன. சுமார் 12,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் உலகின் மிக உயரமான விமான தளங்களில் ஒன்றாகும்.
“ஒரே நாளில் சேகரிக்கப்பட்ட பல செயற்கைக்கோள் படங்கள், இந்த ஜே-20 விமானங்கள் மே 27 அன்று விமானத் தளத்திற்கு வந்து சேர்ந்ததைக் குறிக்கிறது. இந்த ஜே-20 விமானங்கள் நிரந்தரமாக ஷிகாட்ஸேவில் உள்ளதன் பின்னணி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக இந்திய எல்லைக்கு அருகில் அவை நிறுத்தப்படுவதும், அந்த விமானங்கள் புழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதும் அரிதான நிகழ்வாக தெரிய வந்துள்ளது.
ஜே-20 போன்ற போர் விமானங்கள் திபெத்தில் நிலைநிறுத்தப்படுவதில் இது முதல் முறை அல்ல என்ற போதும், வணிக ரீதியாகக் கிடைக்கும் செயற்கைக்கோள் படங்களின் மூலம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் முன்னெப்போதையும் விட மிகப்பெரியதாக சீனாவின் முன்னேற்பாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த போர் விமானங்கள் காணப்பட்ட திபெத்தின் ஷிகாட்சே, வங்காளத்தில் உள்ள ஹசிமாராவில் உள்ள இந்திய விமானப்படையின் தளத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு இந்தியா 16 ரஃபேல்களின் இரண்டாவது படைப்பிரிவைத் தளமாகக் கொண்டுள்ளது. இந்திய விமானப்படையின் உச்சமாக அலங்கரித்திருக்கும் இந்த ரஃபேல்களுக்குப் போட்டியாக, சீனாவின் நகர்வாகவும் ஷிகாட்சேவில் ஜே-20 விமானங்கள் இருப்பை கணிப்பவர்கள் உண்டு.
ஆனால் கடந்த ஆண்டுகளில் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் பெரும் பரப்பை ஆக்கிரமித்து, மாதிரி கிராமங்களை அமைத்து வருவது, இந்திய எல்லைகளை ஒட்டி ராணுவ துருப்புகள் நடமாட்டத்துக்கான சாலைகள், பாலங்களை அமைப்பது என சீனாவின் நகர்வுகள் எல்லையின் பதற்றத்தை கூட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. அத்துடன் தற்போதைய ஜே-20 போர் விமானங்களை சீனா அதிகரித்து வருவது இந்த பதற்றத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளன.
+ There are no comments
Add yours