ஆசியக் கோப்பை 2023-யின் இறுதிப்போட்டி இன்று பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியும், இலங்கை கிரிக்கெட் அணியும் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்கத்திலே மிகவும் தடுமாறி விளையாடி வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்திலேயே தங்களுடைய விக்கெட்களை இழந்து வெளியேறினார்கள்.
அதன் பிறகு வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இருந்த நிலையில், இலங்கை அணி 5 ஓவர்கள் முடிவிலேயே 6 விக்கெட்களை இழந்து 12 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாப நிலையில் இருந்தது. இறுதியாக 15.2 ஓவர்களிலேயே தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 51 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
களமிறங்கிய இந்தியா
இதனையடுத்து, இந்திய அணியில் தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய இஷான் கிஷன்(23) மற்றும் சுப்மன் கில் (27) இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி 6.1 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இலங்கை அணியை வீழ்த்தியதன் மூலம் 2023 ஆசியகோப்பையை இந்திய வென்று 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை பதிவு செய்துள்ளது.
சாதனை
இதுவரை இலங்கை அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் 8 முறை ஆசிய கோப்பை இறுதிப்போட்டிகளில் மோதி இருந்த நிலையில், இதில் 5 முறை இந்திய அணியும், 3 முறை இலங்கை அணியும் வெற்றிகளை பதிவு செய்திருந்தது. இதனையடுத்து, இவர்களுக்கு இடையே இன்று நடைபெற்ற 9-வது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இலங்கைக்கு எதிராக 6-வது வெற்றியை பதிவு செய்தது. அது மட்டுமின்றி இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் 8-வது முறை கோப்பையை வென்றது.
வெற்றிக்கு காரணம்
இந்த ஆண்டு இந்திய அணியின் ஆசிய கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் என்று கூறலாம். ஏனென்றால், இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் முகமது சிராஜ் 7 ஓவர்கள் பந்து வீசி 6 விக்கெட்கள், ஹர்திக் பாண்டியா 2.2 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்களும், பும்ரா 5 ஓவர்கள் பந்துவீசி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இவர்களுடைய அபாரமான பந்துவீச்சிலேயே இலங்கை அணி சிறிய டார்கெட்டில் சுருள அடுத்ததாக பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
+ There are no comments
Add yours