மோடியின் ஆட்சி விரைவில் கலைந்து விடும்: நாராயணசாமி கருத்து

Spread the love

“நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மத்தியில் மோடி தலைமையில் அமைந்துள்ள இந்த ஆட்சி விரைவில் கலைந்து விடும்” என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “பாஜக அதிக இடங்களை பெறும் என்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய்யாகி உள்ளது. நாட்டு மக்கள் பாஜகவுக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். ஆணவம், தொழிலதிபர்களை மிரட்டி வழக்கு பதிந்து பணம் வசூலித்தல், சிபிஐ, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தங்கள் கட்சியில் சேர்க்க வைத்தனர்.

பிரதமர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். இது பாஜகவுக்கும், மோடிக்கும் மிக பெரிய அவமானம். மோடி ஒரு சிறந்த மனிதர் என்றால் அவர் அந்த பதவியை நோக்கி சென்றிருக்க கூடாது. இந்த ஆட்சி குறை பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும். 5 வருடம் நீடிக்காது.

நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் பழமை வாய்ந்த அரசியலில் முதிர்ந்தவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதிகரத்தை ஏற்றுகொள்ளமாட்டார்கள். வெகு விரைவில் இந்த ஆட்சி கலைந்துவிடும். கூட்டணி கட்சிகளே மோடியை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.‌

மத்திய பாஜக ஆட்சியுடன் கூட்டணியில் இருந்தும் இதுவரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை என்ஆர் காங்கிரஸ் கட்சியால் பெறமுடியவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. இதனால் தான் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ரங்கசாமி, ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் அவர் செய்யமாட்டார். நாற்காலி தான் முக்கியம். புதுச்சேரியை அவர்கள் குட்டிசுவராக்கியுள்ளனர். தொண்டர்களை வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெற்றுள்ளோம். இதில் இருந்து நமச்சிவாயம் செல்லாக்காசு என தெரிகிறது.

சூடு சொரணை இருந்தால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும். புதுச்சேரி பாஜகவில் தற்போது பூகம்பம் வெடிக்கிறது. தற்போதைய பாஜக தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் அறிக்கை விட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours