காங்கிரஸை விட வஞ்சகமான கட்சி வேறு எதுவும் இல்லை- பிரதமர் மோடி தாக்கு

Spread the love

குருஷேத்ரா (ஹரியனா): “இன்றைய காங்கிரஸ், நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவமாக மாறியுள்ளது” என விமர்சித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டில் காங்கிரஸை விட நேர்மையற்ற, வஞ்சகமான கட்சி வேறு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “இந்திய கலாச்சாரத்தின் புனிதத் தலம் குருஷேத்திரம். இந்தப் புண்ணிய பூமியில் இருந்து பாஜக ஆட்சி அமைக்க மீண்டும் ஒருமுறை உங்களிடம் கோரிக்கை வைக்க வந்துள்ளேன். இங்கு தெரிகிற உற்சாகம், பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற ஹரியானா முடிவு செய்துள்ளதாக எனது அரசியல் அனுபவம் கூறுகிறது.

மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமையும்போது, ஆட்சியின் முதல் 100 நாட்கள் பெரிய முடிவுகளால் நிறைந்ததாக இருக்கும் என்று கூறியிருந்தேன். இன்னும் 100 நாட்கள் முடிவடையவில்லை. ஆனால், நமது அரசு சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளை தொடங்கியுள்ளது. பாஜக அரசு ஏழைகளுக்கு மூன்று கோடி வீடுகளைக் கட்ட அனுமதித்துள்ளது. ஏழைகளின் கனவுகளை நனவாக்கும் களமாக இது இருக்கும்.

நாட்டில் மூன்று கோடி பெண் லட்சாதிபதிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஆண்டில் 1 கோடி பெண் லட்சாதிபதிகள் உருவாக்கப்பட்டனர். தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் அனைவருக்கும் ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்படும் என பாஜக அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் பெரியவர்களுக்கு கொடுத்த உத்தரவாதத்தை மோடி நிறைவேற்றியுள்ளார். ஹரியானாவின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது, உங்கள் குழந்தைகளை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள், உங்களின் இந்த மகன் (மோடி), உங்களின் இந்த சகோதரன் (மோடி), உங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்கிறார்.

ஹரியானாவில் பாஜக அரசு முழு மனதுடன் சேவை செய்து வருகிறது. கடந்த ஆண்டுகளில், முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக ஹரியானா உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் அந்தக் காலகட்டத்தைப் பார்த்தோம். வளர்ச்சிப் பணம் ஒரு மாவட்டத்துக்கு மட்டுமே சென்றது. அது மட்டுமின்றி, அந்தப் பணம் யாருடைய பாக்கெட்டுகளுக்கு சென்றது என்பது ஹரியானாவின் ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும்.

பாஜக ஒட்டுமொத்த ஹரியானாவையும் வளர்ச்சியின் நீரோட்டத்துடன் இணைத்துள்ளது. பாஜக அரசு வருவதற்கு முன்பு இங்குள்ள பாதி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லை. இன்று ஹரியானா கிட்டத்தட்ட 100 சதவீத குழாய் நீர் உள்ள மாநிலமாக மாறி வருகிறது. மக்கள் பிரச்சினைகள் பற்றி காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நாட்டில் காங்கிரஸை விட நேர்மையற்ற, வஞ்சகமான கட்சி வேறு எதுவும் இல்லை.

விவசாயிகளுக்காக காங்கிரஸ் பெரிதாகப் பேசுகிறது. பெரிய கனவுகளைக் காட்டுகிறது. இது பொய்யன்றி வேறில்லை என்பதே உண்மை. காங்கிரஸுக்கு அதிகாரம் இருக்கும் கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் விவசாயிகள் திட்டங்களை செயல்படுத்தாதது ஏன்? கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முடங்கியுள்ளன. காங்கிரஸ் ஒரு நேர்மையற்ற கட்சி. காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு கொள்கை மட்டுமே உள்ளது – அது தேர்தலில் வெற்றி பெற வேண்டும்; பொதுக் கருவூலத்தை காலி செய்ய வேண்டும் என்பதுதான் அது.

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பற்றி இவர்கள் எவ்வளவு சத்தம் போடுகிறார்கள். அதேசமயம் நாட்டிலேயே 24 பயிர்களை MSP-யில் வாங்கும் ஒரே மாநிலம் நமது ஹரியானாதான். காங்கிரஸ்காரர்களிடம் கேட்கிறேன், கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் எத்தனை பயிர்களை MSP விலையில் வாங்குகிறீர்கள்? அங்குள்ள விவசாயிகளுக்கு எவ்வளவு MSP வழங்கப்படுகிறது? விவசாயிகளின் சுமையை தன் மீது சுமக்க பாஜக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பாஜக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதில், ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு மட்டுமின்றி, நாட்டை எப்போதும் காக்கும் ராணுவ வீரர்களுக்கும் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்தியது பாஜக அரசு.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டுவருவதற்கு காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. இதன்மூலம், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நமது ராணுவ வீரர்கள் மீது கற்கள் வீசப்பட்ட காலத்தை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறது. அந்த பயங்கரவாதம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறது.

தாஜா செய்வதுதான் காங்கிரஸின் முக்கிய நோக்கம். இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் விநாயகர் சிலையைக் கூட சிறைக்குள் தள்ளும் சூழல் உருவாகியுள்ளது. விநாயகர் வழிபாட்டுக்கு காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய காங்கிரஸ், நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவமாக மாறியுள்ளது. பொய் சொல்வதில் காங்கிரஸ் வெட்கப்படாது. காங்கிரஸ் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பொய்யைச் சொல்கிறது. நாட்டின் ஒற்றுமையை காங்கிரஸ் தொடர்ந்து தாக்கி வருகிறது. பாரதிய ஜனதாவை இழிவுபடுத்தும் நோக்கில், இந்தியாவையும் அது அவதூறு செய்கிறது. இதற்காக அக்கட்சி வெட்கப்படவில்லை. எனவே, இப்போது காங்கிரஸிடமும் அதன் கூட்டணிக் கட்சிகளிடமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் தலித்துகள், ஓபிசிகள் மற்றும் பழங்குடியினருக்கு மிகப் பெரிய எதிரி யாராவது இருக்கிறார்களா என்றால், அது காங்கிரஸ் குடும்பம்தான். இப்போது இவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று கூறியுள்ளனர். இதுதான் இந்தக் குடும்பத்தின் உண்மை முகம். மோடி இருக்கும் வரை, பாபா சாகேப் அம்பேத்கர் கொடுத்த இடஒதுக்கீட்டில் ஒரு துளி கூட கொள்ளையடிக்கவோ, அகற்றவோ அனுமதிக்க மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.

நேரு பிரதமராக இருந்தபோது இடஒதுக்கீட்டை எதிர்த்தார். இடஒதுக்கீட்டில் உள்ளவர்களுக்கு வேலை கிடைத்தால் அரசுப் பணியின் தரம் கெட்டுவிடும் என்று நேரு கூறினார். ஓபிசி இடஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட காக்கா காலேல்கர் கமிஷன் அறிக்கையை நேரு கிடப்பில் போட்டார். இந்திரா காந்தி வந்தவுடன் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கும் தடை விதித்தார். நாடு அவரை தண்டித்தபோது, ​​ஜனதா கட்சி ஆட்சி அமைக்கப்பட்டது. பின்னர் மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்டது. ஆனால், பின்னர் காங்கிரஸ் வந்து மண்டல் கமிஷன் அறிக்கையை கிடப்பில் போட்டது. இதற்குப் பிறகு, ராஜீவ் காந்தியும் தனது அரசாங்கத்தில் ஓபிசி-கள் இடஒதுக்கீடு பெற அனுமதிக்கவில்லை. ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி வருவதால் அனைவருக்கும் வளர்ச்சி, விரைவான வளர்ச்சி கிட்டும்” என தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours