வரி நிலுவையை கட்ட காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் !

Spread the love

காங்கிரஸ் கட்சி வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்று கூறி, வட்டி மற்றும் அபராதத்துடன் ரூ.1,823 கோடி வரி நிலுவை செலுத்துமாறு அக்கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2017-18 முதல் 2020-21 வரையிலான 4 ஆண்டுகளுக்கான வரி கணக்கை காங்கிரஸ் முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த அக்கட்சிகளை நிதி ரீதியாக முடக்குவதே பாஜகவின் உத்தி. காங்கிரஸை முடக்கவரி பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளது பாஜக” என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து வரும் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் பொருளாளர் அஜெய் மக்கான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-19 நிதி ஆண்டுக்கான வரிக் கணக்கை காங்கிரஸ் முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி கடந்த பிப்ரவரியில் அக்கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது. காங்கிரஸ் கட்சியின் முறையீட்டை தொடர்ந்து, முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் தற்காலிகமாக செயல்பட வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.

காங்கிரஸ் கட்சியின் வருமானத்தில் ரூ.520 கோடிக்கு கணக்கு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த வருமான வரித் துறை, 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான காங்கிரஸ் கட்சியின் வருமான வரி விவரங்களை மறுமதிப்பீடு செய்யத் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

ஆனால், கடந்த 22-ம் தேதி காங்கிரஸின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, 2017-18 முதல் 2020-21 வரையிலான 4 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான காங்கிரஸின் வரி விவரங்களை மறுமதிப்பீடு செய்யும் நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியது. இதை எதிர்த்து காங்கிரஸ் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை கடந்த28-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா, புருஷைந்திரகுமார் கவுரவ் அமர்வு, காங்கிரஸின் மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரூ.11 கோடி வரி நிலுவை செலுத்துமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சில ஆண்டுகளாக பழைய பான் அட்டையை பயன்படுத்தி வரி தாக்கல் செய்துவந்ததாகவும், வட்டி மற்றும் அபராதத்துடன் சேர்த்து அக்கட்சிக்கு ரூ.11 கோடி வரி நிலுவை உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமான வரித் துறையின் நோட்டீஸ் குறித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்வது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் கலந்துபேசிவருவதாக இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours