பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நாட்டு மக்களுடன் தொடர்பில் இருக்கும் பிரதமர் மோடி, நேற்று வாட்ஸ் ஆப் சேனலிலும் வலது கால் வைத்துள்ளார். அது குறித்தும், வாட்ஸ் ஆப் சேனலில் பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்களை பின் தொடர்வது எப்படி என்றும் இங்கே பார்ப்போம்.
உலகத் தலைவர்கள் மத்தியில் சமூக ஊடகங்களில் அதிகம் பின் தொடரப்படும் பிரபலங்களில் ஒருவராக விளங்குகிறார் பிரதமர் மோடி. ஃபேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்), யூடியூப் உட்பட எல்லா தளங்களிலும் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவரது சகல நகர்வுகளும், நாட்டு மக்களுக்கு அவர் தெரிவிக்க விரும்பும் தகவல்களும் உடனுக்குடன் இந்த சமூக ஊடகப் பக்கங்களில் அவரது அலுவலகத்தினரால் பதிவேற்றப்படுகின்றன.
கடந்த வாரம் வாட்ஸ்- ஆப் செயலியில் சேனல் வசதி அறிமுகமானது. பல்துறை பிரமுகர்களும் தங்களது பிரியத்துக்கு உரியவர்கள் மற்றும் பின்பற்றுவோரை எளிதில் சென்றடைய வாட்ஸ் ஆப் செயலியில் இந்த உபாயம் கைகொடுக்கிறது. இதன் மூலம் தகவல்கள், படங்கள், கருத்துக்கணிப்பு உள்ளிட்ட பலவற்றையும், தம்மை பின்தொடர்வோருக்காக பிரபலங்கள் பதிவிட முடியும்.
பிரபலங்களை பின்தொடர்வோர் இந்த சேனலில் இணைந்திருப்பதன் மூலம், பிரபலத்துடன் இணைந்திருக்க முடியும். சுடச்சுட பிரபலங்கள் வெளியிடும் தகவல்களை அறிந்துகொள்ள முடியும். பிரபலங்களின் பதிவுகளுக்கு பின்தொடர்வோர் எமோஜி வாயிலாக உடனடியாக எதிர்வினையாற்ற முடியும். இந்த தகவல் தொடர்பையும் பிரபலத்தை பின்தொடரும் இன்னொருவரால் அறிய இயலாது.
சர்வதேச பிரபலங்கள் பலரும் வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்து வருவதன் மத்தியில், இன்றைய தினம் இந்திய பிரதமர் மோடியும் ’நரேந்திர மோடி’ என்ற தலைப்பில் வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தனது அலுவல் அறையில் கடமையாற்றும் மோடியின் புதிய புகைப்படத்தை அவரது வாட்ஸ் ஆப் சேனல் பக்கம் தாங்கியுள்ளது.
மோடி உட்பட வாட்ஸ் ஆப் சேனலில் குறிப்பிட்ட பிரபலத்தை பின்தொடர விரும்புவோர், முதலில் தங்களது வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் தங்கள் வாட்ஸ் ஆப்பை திறந்ததும் தென்படும் அப்டேட்ஸ் என்பதை க்ளிக் செய்து, அப்பக்கத்தின் அடியில் தோன்றும் Find channel என்பதை சொடுக்க வேண்டும்.
இப்போது வாட்ஸ் ஆப் சேனலில் காணக்கிடைக்கும் விஐபிக்கள் பட்டியல் நீளும். அவற்றிலிருந்து உரியவரை தேர்வு செய்து பின் தொடரலாம். அல்லது வழக்கமான தேடல் வசதியையும் இதில் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட சேனலில் பிரபலங்கள் பதிவிட்டதன் கடைசி 30 நாட்களுக்கான பதிவுகள் இந்த சேனல்களில் இடம்பெற்றிருக்கும்.
+ There are no comments
Add yours