புதுடெல்லி: “அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள், அதனை மாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ எனக் குறிப்பிட்டு எதிர்மறை அரசியலில் ஈடுபடுவதில் ஆச்சரியம் இல்லை” என்று பாஜகவை பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை, “மத்திய அரசு ஜூன்,25, 1975 அன்று அவசரநிலையை பிரகடனப்படுத்தப்பட்ட நாளை அரசியலமைப்பு படுகொலை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளை சகித்த அனைவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவுகூரும்” என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் மகத்தான மக்கள் சுதந்திரம் மற்றும் இந்த அரசியலமைப்பை அடைய ஒரு வரலாற்று யுத்தத்தை நடத்தினர். அரசியலமைப்பை உருவாக்கியர்கள், அரசியலமைப்பின் மீது நம்பிக்கை உடையவர்கள், அதனை பாதுகாப்பார்கள்.
அரசியலமைப்பு அமலாக்கப்படுவதை எதிர்த்தவர்கள், அரசியலமைப்பை ஆய்வு செய்ய குழு அமைத்தவர்கள், அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர்கள், தங்களின் முடிவுகள் மற்றும் செயல்களால் அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் ஜனநாயகம் மீது தொடந்து தாக்குதல் நடத்தியவர்கள், எதிர்மறை அரசியலாக அரசியலமைப்பு படுகொலை தினம் அனுசரிப்பதில் ஆச்சரியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மத்திய அரசின் இந்த முடிவை பிரதமர் நரேந்திர மோடியின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் பாசாங்குத்தனமான முயற்சி என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. பாஜக தலைமையோ, காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகார மனநிலையை இது மக்களுக்கு நினைவூட்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு படுகொலை தின அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜூன் 4-ம் தேதி வரலாற்றில் மோடி முக்தி தினமாக இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் ஆட்சிமைக்க பெரும்பான்மைக்கு தேவைப்படும் 272 இடங்களை பெற பாஜக தவறியது அக்கட்சி 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. என்றாலும் அதன் தலைமையிலான என்டிஏ கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதனால் கூட்டணி ஆதரவுடன் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தது.
+ There are no comments
Add yours