வயநாடு எம்பியாக பதவியேற்றார் பிரியங்கா !

Spread the love

புதுடெல்லி: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் மக்களவையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், மாநிலங்களவையில் சோனியா காந்தியும் எம்.பி.க்களாக உள்ளனர்.

அதேபோல் நான்டட் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸின் ரவீந்திர வசந்த்ராவ் சவானும் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.

4 லட்ச வாக்குகள் வித்தியாசம்: முன்னதாக, வயது மூப்பு காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சோனியா காந்தி, காங்கிரஸ் கோட்டையான ரேபரேலி தொகுதியை விட்டுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி அங்கு போட்டியிடலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் 2024 மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு தனது வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலைச் சந்தித்த வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியை நிறுத்தும் முடிவினை காங்கிரஸ் எடுத்தது. தொடர்ந்து வயநாட்டில் போட்டியிட்டு பிரியங்கா தனது தேர்தல் அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரனின் சாதனையை முறியடித்தார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4,10,931 (4 லட்சத்து 10 ஆயிரத்து 931) வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

உங்களின் குரலாக ஒலிப்பேன்… பிரியங்கா தனது நன்றி உரையில், “எனது அன்புக்குரிய வயநாடு சகோதர, சகோதரிகளே! என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் நான் நன்றியில் முழ்கித் திழைக்கிறேன். காலப்போக்கில் எனது இந்த வெற்றியை உண்மையில் உங்களின் வெற்றியாக நான் உணரச் செய்வேன். உங்களை பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்து கொண்டவர், உங்களில் ஒருவராக உங்களுக்காக போராடுகிறார் என்பதையும் உணரச் செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன். இந்த மரியாதையை நீங்கள் எனக்கு அளித்ததற்கும், நீங்கள் எனக்கு அளித்த அளவு இல்லாத அன்புக்கும் நன்றி.” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அவர் முதலில் எழுப்பும் குரல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours