ரேபரேலியா ? வயநாடா ? கேள்விக்கு ராகுலின் அசர வைத்த பதில் !

Spread the love

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் எந்த தொகுதியை தக்க வைக்கப் போகிறார் என்பது குறித்து வித்தியாசமான பதிலை அளித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்.பி- ராகுல் காந்தி, கேரள மாநிலம், வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பிறகு ரேபரேலி தொகுதிக்கு நேற்று தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

அதைத் தொடர்ந்து இன்று வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் கேரள மாநிலம், மலப்புரத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: “எனக்கு முன் ஒரு இக்கட்டான நிலை உள்ளது வயநாடு அல்லது ரேபரேலி நான் எந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கப்போகிறேன்? என்பதே அது. துரதிர்ஷ்டவசமாக பிரதமரைப் போன்று நான் கடவுளால் வழிநடத்தப்படவில்லை. நான் ஒரு மனிதன்.

‘400-க்கும் மேல்’ என பிரதமர் மோடி கூறியதை நீங்கள் பார்த்தீர்கள். அதன் பிறகு 400 என்பது மறைந்து ‘300-க்கும் மேல்’ வந்தது. ‘300-க்கும் மேல்’ மறைந்த பிறகு ‘நான் கடவுளின் அவதாரம்’ என பேசினார். தான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பரமாத்மா இந்த பூமியில் தன்னை வைத்து எல்லா முடிவுகளையும் எடுக்கிறார் என பிரதமர் மோடி கூறினார்.

மோடியின் விசித்திரமான ‘பரமாத்மா’ அவரை அதானி, அம்பானிக்கு ஆதரவாக அனைத்து முடிவுகளையும் எடுக்க வைக்கிறது. மும்பை விமான நிலையம், லக்னோ விமான நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை அதானிக்கு கொடுக்கச் சொல்கிறது ‘பரமாத்மா’.

வயநாடு மக்கள்தான் எனது கடவுள். என்னைப் பொறுத்தவரை, இது எளிதானது. நான் மக்களுடன் மட்டுமே பேசுகிறேன். என்ன செய்ய வேண்டும் என்று என் கடவுள் என்னிடம் கூறுகிறார். வயநாடு அல்லது ரேபரேலி விஷயத்தில் நான் உங்களுக்கு உறுதியளிப்பது என்னவென்றால், வயநாடு மற்றும் ரேபரேலி இரண்டு தொகுதி மக்களும் எனது முடிவில் மகிழ்ச்சியடைவார்கள்.” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours