ஆளும் பாஜக, மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமூகமாக இருக்காது. பாஜக தோற்றால் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கக்கூடும் என குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏழு பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான ஜி.எம். அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி ஹரிபரந்தாமன், பி.ஆர். சிவக்குமார், சிடி செல்வம், எஸ். விமலா மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நீதிபதிகள் தங்கள் கடிதத்தில், ‘ மக்களவைத் தேர்தலின் முடிவின் அடிப்படையில், ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் குதிரை பேரம் உள்ளிட்ட அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் காரணமாக ஏதேனும் அரசியல் சாசன சிக்கல்கள் எழுந்தால் அதை சரி செய்ய 5 நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை நடத்திய விதம், உண்மையில் கவலை தருவதாகவே உள்ளது. புகார்கள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சு இருந்தது. மேலும், ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமூகமாக இருக்காது. பாஜக தோற்றால் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கக்கூடும்’ என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
+ There are no comments
Add yours