இந்தியாவின் உறுப்பு தானம் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க வகையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2013ம் ஆண்டில் 5,000 ஆக இருந்த உறுப்பு தானம் எண்ணிக்கை தற்போது 15,000 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்வோருக்கான விடுப்பு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 65 வயது வரம்புகள் நீக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உடல் உறுப்பு தானத்தை பிரபலப்படுத்த மேலும் பல கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அனைத்து ஏழை மக்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 நிதி உதவி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
“உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அனைத்து ஏழை மக்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 நிதி உதவி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் செய்வதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மற்றொரு உயிரைக் காப்பாற்ற உடல் உறுப்புகளை தானம் செய்வதை விட மனித குலத்திற்கு செய்யும் சேவை வேறு எதுவும் இருக்க முடியாது என்றார். உயிருடன் இருக்கும்போது ரத்த தானம் செய்யுங்கள், இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள் என்றும் அறைகூவல் விடுத்தார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு வழக்கமான மருந்துகள் மற்றும் பரிசோதனையின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய மத்திய அமைச்சர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அனைத்து ஏழை மக்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 நிதி உதவி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார். மேலும், அவர்களின் வழக்கமான பரிசோதனைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், 2024ஆம் ஆண்டு இறுதிக்குள், நாட்டின் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உறுப்புகளை மீட்டெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், சுகாதார பணியாளர்களை அதிகரிக்கவும், நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் இந்தியா பல முக்கிய முயற்சிகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
+ There are no comments
Add yours