மும்பை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தருவேன் என சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசிய வீடியோவில், “ தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ராகுல் காந்தி பேசினார். இது காங்கிரஸின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இடஒதுக்கீட்டை இயல்பாகவே எதிர்க்கும் மனநிலையை இது காட்டுகிறது. ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் சன்மானம் அளிப்பேன்.
ராகுல் காந்தியின் கருத்துகள் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். மராத்தியர்கள், தங்கர்கள் மற்றும் ஓபிசிக்கள் போன்ற சமூகங்கள் இடஒதுக்கீட்டிற்காக போராடுகின்றன, ஆனால் ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசுகிறார்” என்று கூறினார்.
மேலும், “ராகுல் காந்தி அரசியல் சாசனப் புத்தகத்தைக் காட்டி, பாஜக அதை அழித்துவிடும் என்று போலிக் கதையைப் பரப்பி வந்தார். ஆனால் நாட்டை 400 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டது காங்கிரஸ் தான். ஒருபுறம், மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இடஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கெய்க்வாட்டின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான விஜய் வடேட்டிவார், “ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்எல்ஏவின் கருத்துக்கள் முட்டாள்தனம். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் இவருக்கு பாடம் புகட்டுவார்கள்” என்று கூறினார்.
+ There are no comments
Add yours