சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம் !

Spread the love

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் மீதான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு தலா ரூ.10,000 அபராதம் விதித்தும், மார்ச் 6ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையா ஆஜராகவும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் சித்தராமையா மார்ச் 6-ஆம் தேதியும், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மார்ச் 7-ஆம் தேதியும், காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மார்ச் 11-ஆம் தேதியும், கனரகத் தொழில் துறை அமைச்சர் பாட்டீல் மார்ச் 15-ஆம் தேதியும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல், ஏப்ரல் 12, 2022 அன்று உடுப்பியில் உள்ள ஒரு லாட்ஜில் உயிரிழந்து கிடந்தார். கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீலின் மரணம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பதவி ராஜினாமா செய்யக் கோரி, அப்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் இல்லத்தை நோக்கி தற்போதைய முதலமைச்சர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் சட்டவிரோதமாக பேரணி நடத்தியதாக கூறப்படுகிறது.

பேரணி நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரி, முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours