வயோதிகம் காரணமாக வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (77) நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கு அவர் உருக்கத்துடன் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2004-ம் ஆண்டு முதல் ரேபரேலி மக்கள் தங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராக கருதி தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வருகின்றனர். இன்று நான் வகிக்கும் பொறுப்புகள் அனைத்தும் நீங்கள் தந்தது.
நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளேன் என்பதை பெருமிதத்துடன் நினைவுகூர்கிறேன். இப்போது வயதாகி விட்டதால் உங்களுக்கு சேவை செய்ய எனது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. உங்களிடமிருந்து விடைபெறும் தருணம் வந்துவிட்டது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்.
இந்த முடிவுக்குப் பிறகு உங்களுக்கு நேரடியாக சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால், என் இதயமும், ஆன்மாவும் எப்போதும் ரேபரேலி மக்களுடன்தான் இருக்கும்.
கடந்த காலங்களில் நீங்கள் எனக்கு உறுதுணையாக இருந்தது போலவே எதிர்காலத்திலும் என் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.இவ்வாறு சோனியா தெரிவித்துள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்ற தனது முடிவை வாக்காளர்களுக்கு வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இம்முறை சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours