ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது

Spread the love

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட வாக்குப் பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், ஜம்முவில் 3 மாவட்டங்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 4 மாவட்டங்கள் என மொத்தம் 7 மாவட்டங்களில் உள்ள24 தொகுதிகளில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 90 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.66 லட்சம் இளைஞர்கள் உட்பட சுமார் 23.27 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மொத்தம்3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் பணியில் 14,000 பேர் ஈடுபட்டனர். தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்பதால் ராணுவவீரர்கள், துணை ராணுவப் படையினர், ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மாலை 5 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கிஷ்துவாரில் 77.23% வாக்குகள் பதிவாகின. தோடாவில் 69.33%, ராம்பனில் 67.71%, குல்காமில் 59.62%, குறைந்தபட்சமாக புல்வாமாவில் 43.87% வாக்குகள் பதிவாகியிருந்தன. முதல்கட்ட தேர்தலில் சுமார் 59 சதவீதவாக்குகள் பதிவானதாக மாநில தலைமைதேர்தல் அதிகாரி பி.கே.போல் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மேலும், ஒன்றுபட்ட மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது. இத்தேர்தலில் காங்கிரஸும், தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன.

முன்னதாக, பிரதமர் மோடி வெளியிட்டவலைதள பதிவில், “மக்கள் திரளாக வந்து வாக்களித்து, ஜனநாயக திருவிழாவை பலப்படுத்த வேண்டும். இளம்மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்திருந்தார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது அவமானம். ஜம்மு காஷ்மீர் மீண்டும் தனது செழிப்பை பெற உங்கள் வாக்குகள் வழிவகுக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.ஜம்மு காஷ்மீரில் 2-ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதியும் 3-ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.1-ம்தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்.4-ம் தேதி நடைபெற உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours