புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை போக்கானது தேர்தலில் நரேந்திர மோடிக்குக் கிடைத்துள்ள தார்மிக தோல்வியையே உணர்த்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “543 மக்களவைத் தொகுதிகளில் தற்போதைய வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகிவிட்டது. தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை எண்ணிக்கையை பாஜக எட்டவில்லை என்பதை அது காட்டுகிறது. இது பாஜகவுக்கு அரசியல் அடியாகவும், நரேந்திர மோடிக்கு தார்மிக தோல்வியாகவும் அமையும்.
பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் தில்லுமுல்லு அம்பலமாகிவிட்டது. பாஜக கூட்டணிக்கு 290 சீட்களில் வெற்றியோடு மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவானாலும் கூட அதன் கோட்டைகளான உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தானில் பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் சூழலில் மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 288 இடங்களிலும், இண்டியா கூட்டணி 236 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் போக்கு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும், கடும் நெருக்குதலுடன் கூடிய வெற்றியையே பெறும் என்பது தெரிகிறது.
+ There are no comments
Add yours