10 சக்கர லாரிகளில் கனிமம் கொண்டு செல்ல தடை இல்லை – உயர் நீதிமன்றம்!!

Spread the love

தென்காசி புளியரை சோதனைச் சாவடி வழியாக 10 சக்கரங்களுக்கும் மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கான இடைக்கால தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி பொதுச்செயலாளர் நாகராஜ், உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த அந்த மனுவில்..

கேரளா மற்றும் தமிழகம் முழுமைக்கும் வாகனங்களை இயக்குகிறோம். கேரளாவின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நடக்கும் கட்டுமானப் பணிகள் சாலைப் பணிகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான கிராவல் ஜல்லி கற்கள், எம்.சாண்ட், குவாரி தூசி மற்றும் மணலுக்கு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்துள்ளோம். தமிழகத்தின் உதவி இல்லாமல் கேரளாவின் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு உரிய அனுமதியுடன் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியரை செக்போஸ்ட் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் புளியரை காவல் ஆய்வாளர் மற்றும் கனிமவன அதிகாரிகள் உள்ளிட்டோர் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமங்களை கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு மற்றும் கோவை மாவட்டம் வாலையார் சோதனை சாவடிகளிலும் இந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

எனவே, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்து 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் புளியரை சோதனை சாவடி வழியாக கனிமங்கள் கொண்டுச் செல்ல தடை விதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கேரளாவுக்கு 10 சக்கரத்துக்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், மீண்டும் இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என வாதிடப்பட்டது.

அதையடுத்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. எனவே, தென்காசி புளியரை சோதனைச் சாவடி வழியாக 10 சக்கரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கான இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours