கொல்கத்தா: மக்களவைத் தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்க மாநில முன்னிலை நிலவரம் பாஜக-வுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் 31 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் பாஜக 18 மற்றும் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும் வென்று இருந்தன. காங்கிரஸ் கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த நிலை அப்படியே மாறியுள்ளது. பாஜகவின் சீட் எண்ணிக்கை சரிந்தும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சீட் எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக, மொத்தம் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டன. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. இதில் காங்கிரஸ் 12 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 23 இடங்களிலும் போட்டியிட்டது. மற்ற 7 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டது.
மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியாக பாஜகவும் செயல்பட்டு வருகிறது. இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் தனித்தே போட்டியிடும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்திருந்தார். அதை கருத்தில் கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். பாஜக வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த சூழலில் தான் திரிணமூல் 31 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
பெரும்பாலான இடங்களில் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திரிணமூல் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக திரிணமூல் சார்பில் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் மஹுவா மொய்த்ரா 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
+ There are no comments
Add yours