மேற்கு வங்க மாநிலத்தில் அங்கன்வாடி மற்றும் ஆஷா திட்ட ஊழியர்களின் சம்பளத்தை வரும் ஏப்ரலில் இருந்து உயர்த்த முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் அங்கன்வாடி, ஆஷா திட்ட ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.750 உயர்த்தப்பட்டு, ரூ.8,250 ரூபாயிலிருந்து ரூ.9,000-மாக வழங்கப்படும். இதேபோல், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்ட (ஐசிடிஎஸ்) ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ.500 உயர்த்தப்படும். அவர்கள் இதற்கு முன்பு மாதம் ரூ.6 ஆயிரம் ஊதியம் பெற்று வந்தனர். இனி அவர்கள் மாதம் ரூ.6,500 ஊதியம் பெறுவர்.
இந்த அறிவிப்பை முதல்வர் மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து மம்தா, “ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைப்பதால் அவர்களால் நாம் பெருமையடைகிறோம். எல்லா கடினமான நேரங்களிலும் அவர்கள் நமக்கு ஆதரவளிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க நான் விரும்புகிறேன். மா, மாதி, மானுஷ் (அம்மா, பூமி, மனிதர்கள்) என்பார்கள். அதுபோல அரசு எப்போதும் மக்களுடன் இருக்கும்.
நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், நம் மக்கள் மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வதில் எந்த முயற்சியையும் விட்டுவிட மாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
அங்கன்வாடி சேவை என்பது மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும். இது மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வருகிறது. சமீபத்தில், ஒடிசா, கேரள அரசுகளும் அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தின. மேற்கு வங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, தொடங்கி வைக்க, பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்துக்கு சென்றுள்ள நிலையில், மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் திரிணமூல் அரசு, அங்கன்வாடி, ஆஷா திட்ட ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours