இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்கும் இரு தீய சக்திகளை கைது செய்யப்போவதாக அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா கூறியிருப்பதற்கு, ‘அச்சமில்லை. சாவலை ஏற்கிறோம்’ என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து காங்கிரஸின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு மாநிலத்தில் ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு கிடைத்த ஆதரவைப் பார்த்து அசாம் முதல்வர் பதற்றமடைந்திருக்கிறார்.
மேலும், “அசாமின் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும், எல்லா வயதினரும் ராகுல் காந்திக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கின்றனர். இந்த இரண்டு நாளில் யாத்திரைக்கு கிடைத்த ஆதரவைப் பார்த்து மாநில முதல்வர் பதற்றமடைந்துள்ளது தெளிவாக தெரிகிறது.
அசாம் முதல்வர் அவதூறு பரப்பலாம், துஷ்பிரயோகம் செய்யலாம், மிரட்டலாம். ஆனால் நாங்கள் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு கிடைத்த பெரிய ஆதரவால் அவர் கலக்கமடைந்துள்ளார். யாத்திரையை தடம் புரளச் செய்யும் அசாம் முதல்வரின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில் இன்னும் 6 நாட்கள் யாத்திரை அசாமில் தொடர இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த யாத்திரை குவாஹாத்தி வழியாக செல்லுமா என்று அசாம் முதல்வரிடம் கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த ஹேமந்த பிஸ்வா சர்மா, “நகரில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் இருப்பதால் யாத்திரை நகருக்குள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் கேட்டுக்கொண்டால் மாற்று வழியில் செல்ல நாங்கள் அனுமதி வழங்குவோம். ஒருவேளை காங்கிரஸ் யாத்திரை அனுமதி இல்லாமல் குவாஹாத்திக்குள் நுழைந்தால் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது. நான் தேவையில்லாமல் அவர்களுக்கு தேசிய அளவில் வெளிச்சம் தர விரும்பவில்லை. மக்களவைத் தேர்தல் முடிந்து 3 – 4 மாதங்களுக்கு பின்னர் யாத்திரையில் பங்கேற்கும் இரு தீய சக்திகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார். தன்னுடைய இலக்கு யார் என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
முதல்வரின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், “அசாம் முதல்வர், மக்கள் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்பதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறார். யாராலும் இந்த யாத்திரையைத் தடுக்க முடியாது. நாங்கள் இன்னும் சில நாட்கள் அசாமில் தான் இருப்போம். அவர்கள் எங்களை கைது செய்யட்டும், நாங்கள் சவாலை ஏற்கிறோம்” என்று கூறினார்.
அசாம் முதல்வரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகாய், “மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும், எந்த வழக்குக்கும் அஞ்சப்போவதில்லை. ஜனநாயகத்தில் எந்த ஓர் அரசும் எங்களைத் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
முன்னதாக வியாழக்கிழமை அசாமில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசும், முதல்வரும் கொண்ட மாநிலம் அசாம் மாநிலம்” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த அசாம் முதல்வர், “அது நியாய யாத்திரை இல்லை. அது மியா யாத்திரை. எங்கெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்களோ, அங்கே கூட்டம் இருக்கும். முஸ்லிம்கள் இல்லாத இடத்தில் கூட்டம் இருக்காது. அவர்களின் பெண்கள் கூட வெளியே வரமாட்டார்கள். ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். அசாமில் அது பெண்கள் இல்லாத மியா யாத்திரையே. இந்த யாத்திரையில் சில பல மியாக்கள் பங்கேற்கும் நிலையில், அதற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
+ There are no comments
Add yours