கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 17 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது குறித்து அண்ணாமலை, குஷ்பூ ஆகியோர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள், பாலியல் குற்றங்களை அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும் 4,45,000 பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று கூறினார். ஆனால் பெண் குழந்தைகளால் இன்று வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது” என்றார்.
மேலும், “பாஜகவில் முன்னாள் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பாலியல் ரீதியாக 17 வயது நிரம்பிய பெண் குழந்தையை துன்புறுத்தி உள்ளார் என்று போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது அவமானகரமான விசயம். இது குறித்து அண்ணாமலையும், மகளிர் உரிமைத் தொகை குறித்து பெண்களை பிச்சைக்காரி என்று பேசிய குஷ்புவும் வாய் திறக்காதது ஏன்” எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர்,”தமிழக மக்களுக்கு எதும் செய்யாமல் இருப்பவர் அண்ணாமலை. தமிழக எட்டப்பன் அல்ல, உலக எட்டப்பன்தான் அண்ணாமலை. கெளதமி, காயத்திரி ரகுராம் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவர் பதில் சொல்லவில்லை” என கடுமையாக விமர்சித்தார்.
அதேபோல், “இன்று கர்நாடக மாநிலத்தில், ஒரு முன்னாள் முதலமைச்சரால் 17 வயது சிறுமிக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமையை மகிளா காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது” என்றார்.
+ There are no comments
Add yours