சரித்திரத்தில் என்றும் அழியாப்புகழ் பெற்றுவிட்டார் பிரதமர் மோடி என இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. பிரதமர் மோடி இவ்விழாவில் கலந்துகொண்டு பால ராமர் விக்ரக பிரதிஷ்டை பூஜையில் கலந்துகொண்டார். பின்னர் ராமருக்கு ஆரத்தி காட்டி, ராமரின் பாதத்தில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்வில், கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் அயோத்தியில் குவிந்திருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு மேல் பிரபலங்கள் அனைவரும் ராமரை தரிசனம் செய்தனர். மாலை சராயு நதிக்கரையில் தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிலையில், சரித்திரத்தில் என்றும் அழியாப்புகழ் பெற்றுவிட்டார் பிரதமர் மோடி என இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அதில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். ராமர் பிறந்த இடத்திலேயே ராமருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். முன்பெல்லாம் மன்னர்கள் தான் கோயில்களை கட்டினார்கள்.
ஆனால் தற்போது பிரதமர் மோடி கோயிலை கட்டியுள்ளார். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம், யாரால் முடியும் என கூறினார். இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள். யார் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளார்கள் என எண்ணிப்பாருங்கள் என இளையராஜா கண் கலங்கி பேசினார். மேலும், அயோத்தியில் இருக்க வேண்டிய நான், இன்று இங்கு இருப்பதற்காக வருத்தப்படுகிறேன். ஆனாலும், உங்களுடன் இருப்பதில் ஆறுதல் அடைகிறேன். இது இந்தியா முழுவதற்குமான கோயில் என இளையராஜா பேசினார்.
+ There are no comments
Add yours