‘பாஜகவினர் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பதால் ராமரைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்; சீதா தேவியை புறக்கணிக்கிறார்கள்’ என்று பாஜகவை சாடியுள்ளார் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி.
பிரதமர் மோடி தலைமையில் அவரை முன்னிறுத்தி நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து, எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’யின் முக்கியத் தலைவரான மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். குடமுழுக்கு நாளன்று ’அனைத்து நம்பிக்கை பேரணி’ என்ற தலைப்பில் சகல மதங்களையும் உள்ளடக்கிய ஒற்றுமைப் பேரணியை கொல்கத்தாவில் அவர் நடத்தினார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற அனைத்து நம்பிக்கை பேரணியில் மம்தா
கொல்கத்தாவில் நடைபெற்ற அனைத்து நம்பிக்கை பேரணியில் மம்தா
அப்போது, ’அரசியல் லாபங்களுக்காக பாஜகவினர் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை பயன்படுத்திக்கொள்வதாகவும், பாஜகவினர் பெண்களுக்கு எதிரானவர்கள்’ என்றும் மம்தா பானர்ஜி சாடினார். “அவர்கள் ராமரைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். சீதா தேவியைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள். ராமரின் வனவாசத்தின் போது சீதை, ராமருடன் இருந்தாள். ஆனால் பாஜவினர் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பதால் சீதா தேவியைப் பற்றி பேசுவதில்லை.
நாங்கள் துர்கா தேவியை வழிபடுபவர்கள். எனவே பாஜகவினர் எங்களுக்கு மதத்தைப் பற்றி விரிவுரை செய்ய முயற்சிக்க வேண்டாம். பாஜகவினர் போல தேர்தலுக்கு சற்று முன்பாக, மதத்தை அரசியலாக்கிப் பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியலுக்கான வித்தை காட்டும் நிகழ்வாக ஆன்மிகத்தையும், மத வழிபாட்டையும் பயன்படுத்துவோருக்கு நாங்கள் எதிரானவர்கள். அதே வேளையில் ராமரை வழிபடுபவோர் மீது எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
எங்கள் அனைத்து நம்பிக்கை பேரணியின் போது, கோயில்கள் மட்டுமன்றி மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்களுக்கும் செல்கிறோம். ஜனவரி 22 அன்று, நான் முதலில் அன்னை காளிக்கு பிரார்த்தனை செய்த பின்னரே பேரணியை தொடங்கினேன். நான் அடிக்கடி குறிப்பிடும் ’மதம் என்பது தனி நபர்களுக்குச் சொந்தமானது ஆனால் பண்டிகைகள் அனைவருக்குமானது’ என்பதை மற்றுமொரு முறை பதிவு செய்கிறேன்” என்று மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours