மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகளின் மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதலை காவல்துறை தடுத்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆறு பிரஷர் குக்கர்கள், வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
திபாகட் பகுதியில் வெடி மருந்து பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின் பேரில், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் 2 வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுக்களின் உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தப்பட்டது.
மக்களவைத் தேர்தலை சீர்குழைக்கும் நோக்கில் திட்டமிட்டு நக்சலைட்டுகள் அப்பகுதியில் வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியிலிருந்து 9 ஐஇடி வகை வெடிகுண்டுகளும், வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர்கள் நிரப்பப்பட்ட 06 பிரஷர் குக்கர்களும், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 3 கிளைமோர் குழாய்களும் கண்டெடுக்கப்பட்டன. மீதமுள்ள 3 கிளைமோர் குழாய்கள் வெடிபொருட்கள் ஏதுமில்லாமல் இருந்தன என்று கட்சிரோலி எஸ்பி நீலோட்பால் கூறினார்.
அதே இடத்தில் ஒரு பிளாஸ்டிக் பையில் நிரப்பப்பட்ட துப்பாக்கி குண்டுகள், மருந்துகள் மற்றும் போர்வைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில், ஒன்பது ஐஇடி வெடிகுண்டுகள் மற்றும் மூன்று கிளைமோர் குழாய்கள் அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டன.
+ There are no comments
Add yours