‘சூரிய சப்தமி’யை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்ரவரி 15 அன்று, அனைத்துப் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து பிரம்மாண்ட சூரிய நமஸ்காரம் நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தான் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மதன் திலாவரின் உத்தரவைத் தொடர்ந்து, இடைநிலைக் கல்வித் துறை இயக்குநர் ஆஷிஷ் மோடி அனைத்து முதன்மை மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த பிரம்மாண்ட சூரிய நமஸ்கார ஏற்பாடு குறித்து விவரித்துள்ளார்.
மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி 15-ம் தேதி மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். இதன் மூலம் புதிய உலக சாதனை படைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜஸ்தான் மாநிலம் நெடுக அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் ஆகியோரால் ஒரே நேரத்தில் செய்யப்படும் இந்த சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியின் மூலம் உலக சாதனை படைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத மற்றும் ஆன்மிக பின்னணிக்கு அப்பால் சூரிய நமஸ்காரம் என்பது, உடல் நலன் சார்ந்து உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக உள்ளது. உலக சாதனைக்கான ராஜஸ்தானின் முயற்சி மூலம் சூரிய நமஸ்காரம் மற்றும் யோகா குறித்தான விழிப்புணர்வு அதிகமானோரை சென்று சேரும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours