மக்களவைத் தேர்தலையொட்டி மே 26ம் தேதி நடைபெறுவதாக இருந்த யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவானது ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மே 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த யுபிஎஸ்சி குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வானது, ஜூன் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு (Prelims Examination) , முதன்மைத் தேர்வு (Main Examination), Interview (நேர்காணல் தேர்வு) என 3 நிலைத் தேர்வுகள் நடத்தப்படும்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர். இறுதியாக, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன
+ There are no comments
Add yours