மத்திய பிரதேச புதிய முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்ற சூட்டில் அதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள மோதிலால் நேரு ஸ்டேடியத்தில், புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் மங்குபாய் சி படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்தா மற்றும் ராஜேந்திர சுக்லா ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
மபி புதிய முதல்வர் மோகன் யாதவ் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்தவர். அதன் அடிப்படையில் அவரது தீவிரமான செயல்பாடுகள் அமையும் என கணிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப, பதவிப் பிரமாணம் முடிந்த வேகத்தில் புதிய உத்தரவுகள் பலவற்றை பிறப்பித்துள்ளார். அவற்றில் ஒன்றாக திறந்த வெளியில் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்வதற்கும் தடை விதித்தார்.
“தற்போதுள்ள உணவு பாதுகாப்பு விதிகள் தொடர்பான வழிகாட்டுதல்களின்படி திறந்த வெளியில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் முறையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் அளித்த பிறகு அதற்கான நடைமுறைகள் தொடங்கும்” என்று மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதன் பொருட்டு டிசம்பர் 15 முதல் 31 வரை, திறந்த வெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கான தடையை அமல்படுத்துவது தொடர்பாக உணவுத் துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரமும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதனையடுத்து புத்தாண்டு முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. அரசின் புதிய உத்தரவை திடமாக செயல்படுத்தவும், தவறும் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours