மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்த இலங்கைக் கடற்படை!

Spread the love

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை கடற்படையினர் தவிர இலங்கையின் கடற்கொள்ளையர்களும் அடிக்கடி வந்து தமிழக மீனவர்களை தாக்கி வலை, படகுகளை சேதம் செய்து கொள்ளையடித்துச் செல்கின்றனர். இதனால் தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மேலும் ஒரு கைது சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறது இலங்கை கடற்படை. நேற்று காலை ஜெகதா பட்டினம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து 79 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், சின்னையன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்து இலங்கைக்குக் கொண்டு சென்றனர்.

காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

கடந்த வாரத்தில் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் இதேபோல் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களும் அவர்களின் படகுகளும் இப்படி இலங்கை படையினரால் அடிக்கடி சிறை பிடிக்கப்படுவதால் மிகுந்த அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் மீனவர்கள் ஆளாகியுள்ளனர். பலரது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு மத்திய – மாநில அரசுகள் விரைவில் உரிய தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours