ராகுலின் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதா..!

Spread the love

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு பதிலாக, அம்மாநிலத்தின் தவுபால் பகுதியில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் இருந்து நாளை மறுநாள் தொடங்கும் என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.

இது குறித்து மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கேஷ்யாம் மேகசந்திரா கூறியது: “நாங்கள் இம்பாலில் உள்ள ஹப்தா கங்ஜெய்பங்க் மைதானத்தில் இருந்து யாத்திரையைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், மாநில அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியதால், இந்த யாத்திரையை தொடங்கும் இடத்தை மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நாங்கள் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யை இம்பாலில் உள்ள ஹப்தா கங்ஜெய்பங்க் மைதானத்தில் இருந்து தொடங்க அனுமதி கேட்டு ஜனவரி 2-ம் தேதி மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். இந்த யாத்திரை மணிப்பூர் மாநிலத்தின் இம்பாலில் தொடங்கி மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் நிறைவடையும் என்றும் அறிவித்திருந்தோம்.

இது தொடர்பாக ஜனவரி 10-ம் தேதி மணிப்பூர் மாநில முதல்வர் என்.பிரேன் சிங்கை நாங்கள் சந்தித்தோம். ஆனால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என எங்களுக்கு சொல்லப்பட்டது. அதேவேளையில், அன்று பின்னிரவில் ஹப்தா கங்ஜெய்பங்க் மைதானத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் யாத்திரையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் குழு மீண்டும் தலைமைச் செயலாளர் வினீத் ஜோஷியை சந்தித்தது. அப்போது டிஜிபி ராஜீவ் சிங், கிழக்கு இம்பாலின் துணை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளரும் உடன் இருந்தனர். இம்பாலில் 1,000 பங்கேற்பாளர்களுடன் யாத்திரையை தொடங்கிக் கொள்ளலாம் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், வியாழக்கிழமை இரவு தவுபால் இணை ஆணையர் மாவட்டத்தின் கோங்ஜோம் பகுதியில் உள்ள தனியார் மைதானத்தில் வைத்து யாத்திரை தொடங்க அனுமதி வழங்கினார். அதன்படி, வரும் 14-ம் தேதி தவுபாலில் உள்ள தனியார் மைதானத்தில் இருந்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்” என்று அவர் தெரிவித்தார்.

ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரின் தவுபாலில் இருந்து தொடங்கும் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைகிறது. இந்த யாத்திரையை 67 நாட்களில் 15 மாநிலங்களின் 110 மாவட்டங்கள் வழியாக 6,713 கி.மீ. தூரத்துக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours