சென்னை: “அதிமுக – புதிய தமிழகம் கட்சி இடையே கூட்டணி உறுதியானது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று காலை 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது. 2024 மக்களவை தேர்தலில் ஒரு வெற்றிக்கூட்டணியை அமைப்பது தான் எங்களின் நோக்கம்.
அந்த அடிப்படையில் இன்றைய பேச்சுவார்த்தை அமைந்தது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது குறித்தெல்லாம் தெரிவித்தோம். அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் எடுக்கப்படும். ஒரு வலுவான கூட்டணி தமிழகத்தில் அமையும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதிமுக – புதிய தமிழகம் கட்சி இடையே கூட்டணி உறுதியானது.” இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “சில கருத்துக்களை கிருஷ்ணசாமி முன்வைத்துள்ளார். அதை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்போம். கிருஷ்ணசாமி கூறியது போல், இபிஎஸ் தலைமையில் இக்கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். மக்களவை தேர்தல் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தல் வரை நீடித்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours