அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராமை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலையுடனான மோதலால் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் பொறுப்பு வழங்கபட்டதற்கு நன்றி தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்க கழகத்தின் மகளிர் அணி துணைச் செயலாளராக என்னை நியமித்து இருக்கும் கழக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் கழகத்தை நடத்திச் செல்லும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அய்யா அவர்களின் பொற்கரங்களில் கழகத்தின் மகத்தான வெற்றியை சமர்பிப்போம்” என்று தெரிவித்துள்ளார்
நடிகை காயத்ரி ரகுராம் பல ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்தவர். தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் இருந்து வந்தார். இந்தச் சூழலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடனான கருத்து மோதலால் கடந்த ஆண்டு ஜனவரியில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தமிழக பாஜகவையும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையையும் விமர்சித்து வந்தார். அவர் திமுக அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைவார் என தகவல் பரவிய நிலையில், சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
+ There are no comments
Add yours