அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் அல்லது பிரியங்கா போட்டி!

Spread the love

அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் அல்லது பிரியங்கா என நேரு குடும்பத்து வாரிசுகளே போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள நேரு குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியான அமேதியில், ராகுல் மீண்டும் போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. சோனியா காந்தி மாநிலங்களவைக்கு நகர்ந்திருப்பதால் அவரது ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதனால் பிரியங்காவும் அமேதிக்கு இல்லை என்றாகிவிட, அங்கே காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிட விருப்பம் தெரிவித்தார் ராபர்ட் வதேரா.

பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா விருப்பத்தை காங்கிரஸ் தலைமை கண்டுகொள்ளவில்லை. ‘அமேதி மக்கள் தங்கள் தவறை உணர்ந்து விட்டனர்; அங்கு போட்டியிடுமாறு என்னிடம் கோரிக்கை வைத்தனர்’ என்றெல்லாம் ராபர்ட் வதேரா தெரிவித்ததை, காங்கிரஸ் கட்சியில் எவரும் பொருட்படுத்தவே இல்லை.

சோனியா, பிரியங்கா, ராகுல் என நேரு குடும்ப வாரிசுகள் காங்கிரஸ் தலைமையை நிறைத்து இருப்பதை, ஏற்கனவே பாஜக சாடி வருகிறது. ராபர்ட் வதேராவும் இதில் சேர்வது, காங்கிரஸ் மதிப்பை மேலும் குலைக்க வாய்ப்பாகும். ராபர்ட் வதேரா அமேதியில் போட்டியில்லை என்பதை உ.பி காங்கிரசும் உறுதி செய்துள்ளது.

இதனிடையே அமேதியின் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற கேள்வி தேசிய அரசியலில் பெரும் விவாதமாக எழுந்துள்ளது. ராபர்ட் வதேராவை உள்ளடக்கி அமேதி தொகுதி வேட்பாளர் குறித்தான கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.அந்தோணி பிராந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கான பேட்டியில் பதில் தந்திருக்கிறார். ராபர்ட் வதேராவை புறந்தள்ளிய அந்தோணி, ’ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் பிரியங்கா, ராகுல் ஆகியோரே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோற்கும் வரை, 3 முறை அமேதி எம்பி-யாக ராகுல் காந்தியே தேர்வாகி இருந்தார். ஆனால் தற்போது கேரளாவின் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் ராகுல் அமேதியை தவிர்த்திருக்கிறார். இதனை முன்வைத்தும் ஸ்மிருதி இரானி ராகுலை தாக்கியிருந்தார். ’அமேதி தொகுதி மக்களை ராகுல் காந்தி ஏமாற்றிவிட்டதாகவும், அடுத்து வயநாடு தொகுதி மக்களுக்கும் அந்த ஏமாற்றம் காத்திருப்பதாகவும்’ அவர் எச்சரித்து இருந்தார்.

இவற்றை உள்ளடக்கி பேசிய அந்தோணி, “ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளின் காங்கிரஸ் முடிவுக்காக ஊடகங்கள் காத்திருக்கட்டும். நீங்களாக ஊகங்களை செய்யாதீர்கள். நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரே கட்டாயம் அந்த தொகுதிகளின் வேட்பாளராக இருப்பார். ஏனெனில் நேரு குடும்பத்தை நம்பும் அளவுக்கு மதசார்பற்ற சக்திகள் வேறு எவரையும் நம்புவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவுக்கு தாவியிருக்கும் தனது மகனும், பாஜக பத்தினம்திட்டா வேட்பாளருமான அனில் அந்தோணி மக்களவைத் தேர்தலில் தோற்க வேண்டும் என்று பேட்டியளித்து பரபரப்பை கிளப்பியிருந்தார் ஏ.கே.அந்தோணி.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours