இடஒதுக்கீடு சட்டவிரோதமாக ரத்து செய்யபட்டிருக்குமா… ராமதாஸ் !

Spread the love

உயர்கல்வி நிறுவன இடஒதுக்கீடு தேன்கூட்டைப் போன்றது; வீணாக கல்லெறிந்து பார்க்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்ப அனுமதிக்கும் திட்டம் இல்லை என்றும், பல்கலைக்கழக மானியக்குழுவால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் மத்திய அரசு விளக்கமளித்து இருக்கிறது.

தகுதியானவர்கள் இல்லாத சூழலில் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான வரைவு விதி கைவிடப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழுவும் அறிவித்திருக்கிறது. இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள விளக்கங்கள் வரவேற்கத்தக்கவை.

உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவது குறித்த வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை முதன்முதலில் கண்டித்த நான், பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். இதே குரல் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு அதன் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது. மத்திய அரசும் விளக்கமளித்தது. அதன் காரணமாக சமூகநீதி தொடர்பான சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

அதே நேரத்தில் தேவையே இல்லாமல் இத்தகைய சர்ச்சை எழுப்பப்பட்டது ஏன்? அதிகார வரம்பை மீறி அத்தகைய சர்ச்சையை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழு மீது என்ன நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கப் போகிறது? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும்.

இந்த சர்ச்சையில் விளக்கமளித்துள்ள மத்திய அரசின் கல்வி அமைச்சகம், “மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நிலையிலான அனைத்துப் பணியிடங்களுக்கும் 2019ஆம் ஆண்டின் மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு) சட்டத்தின்படி தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அதன்படி வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறது. அப்படியானால், இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது ஏன்? பல்கலைக்கழக மானியக் குழுவின் பணி என்பது உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது தான்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டு, நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது தெரிந்திருந்தும் பல்கலைக்கழக மானியக்குழு வரைவு விதிகளை வெளியிட்டது ஏன்? அதன் மீது கடந்த ஒரு மாதமாக கருத்துகள் கேட்கப்பட்டதை மத்திய அரசு வேடிக்கைப் பார்த்தது ஏன்?

ஒருவேளை எந்த எதிர்ப்பும் எழுந்திருக்காவிட்டால், வரைவு விதிகள் இறுதி விதிகளாக மாற்றப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு சட்டவிரோதமாக ரத்து செய்யபட்டிருக்குமா, இல்லையா?

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு குறித்து தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் நிர்வாகிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை எழுப்புவது தேன்கூட்டில் கல் வீசுவதற்கு ஒப்பானது. அத்தகைய செயல்களில் எந்த அமைப்பும் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours