விஜயதரணி மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
மறைந்த தமிழ் புலவரும், சமூக சீர்திருத்தவாதியுமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி விஜயதரணி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் விளவங்கோடு தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறையாக வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலின் போது கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்காக வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாருக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலின் போதும் அந்த தொகுதியில் போட்டியிட விஜயதாரணி விரும்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் அப்போதும் அவருக்கு சீட் மறுக்கப்பட்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஏற்கனவே அவர் வெற்றி பெற்றிருந்த விளவங்கோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர் தொடர்ந்து கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதனால் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணித்துவிட்டு அவர் டெல்லியில் முகாமிட்டிருந்தார். அவர் விரைவில் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த போதும், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இன்று டெல்லியில் பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் இன்று அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி, ”சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன். தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும் திட்டங்களாலும் பாஜகவில் இணைந்துள்ளேன். தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்பெறச் செய்வோம். தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது. பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்துள்ளார். இது குறித்து பேசி உள்ள அவர், ”காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் விஜயதரணி திரும்ப வருவார். மக்கள் பணியை விஜயதரணி செய்யவில்லை என்றாலும் அவரை மரியாதை உடனேயே நடத்தினோம். ஒருவர் பாஜகவில் இணைந்தால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை. கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு எம்.எல்.ஏ பதவியை இழப்பார்” என்று தெரிவித்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கொறடாவாக விஜயதரணி பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours