காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு ஏற்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வோம்!

Spread the love

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவின் வேட்பு மனுவில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இருப்பதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆரம்பம் முதல் இந்த தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் இழுபறி நீடித்தது. இறுதியாக வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளுக்கு முந்தைய நாளில் ஒருவழியாக வேட்பாளராக சுதா அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவசர அவசரமாக வேட்பாளர் சுதா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்ற போது, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் காளியம்மாள், சுதாவின் வேட்பு மனுவை ஏற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 2016-17-ம் ஆண்டுகளுக்கு பிறகு வேட்பாளர் சுதா 7 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை எனவும், சொந்த வங்கிக் கணக்கில் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி கணக்கினை செலுத்தாமல், பிழைகளுடன் கூடிய படிவம் 26ஐ பூர்த்தி செய்து சத்யபிரமாணப் பத்திரிகையாக அவர் தாக்கல் செய்திருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இருப்பினும் இது நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை எனக் கூறிய தேர்தல் நடத்தும் அலுவலர், சுதாவின் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து விரைவில் நாம் தமிழர் கட்சி சார்பில் சுதாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours