சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எவ்வாறு செயல்படுகிறார் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சட்டப்பேரவை மரபை கடைப்பிடிக்கிறாரா? எதுவுமே கிடையாது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மேலும், தேங்கும் மழைநீர், ஃபார்முலா 4 ரேஸ் தொடர்பாக திமுக அரசை சரமாரியாக சாடிய அவர், அண்ணாமலை ‘மெச்சூரிட்டி’ குறித்தும் கருத்து தெரிவித்தார்.
சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சென்னையில் மிக கனமழை பெய்துள்ளது. மழையின் காரணமாக சென்னை மாநகரமே தண்ணீரில் மிதந்து கொண்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தண்ணீர் எங்கும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் ஒருநாள் மழைக்கே சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளிக்கும் காட்சியை பார்க்க முடிகிறது.
திமுக அரசு முழுமையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தியிருந்தால் தண்ணீர் தேங்காமல் இருந்திருக்கும். நிர்வாகத் திறமை இல்லாத அரசாக திமுக அரசு இருக்கிறது. ஊழல் செய்வதை மட்டுமே இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் செய்து வருகிறது. அதை மட்டுமே இவர்களின் சாதனையாக பார்க்க முடிகிறது. மேலும், சென்னை நகரின் மையப்பகுதியான தீவுத் திடலை சுற்றி கார் பந்தயம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 242 கோடி ரூபாய் செலவு செய்வதாக செய்தி வாயிலாக பார்த்தேன், இதற்கு ரூ.42 கோடி அரசு சார்பில் சாலையை சரிசெய்வதற்காக அரசு செலவு செய்வது கண்டிக்கத்தக்கது” என்றார்.
பின்னர் சட்டப்பேரவைத் தலைவருக்கு மிரட்டல் வருவதாக கூறியது குறித்த கேள்விக்கு, “சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறுவதற்கு உரிய ஆதாரம் இருந்தால்தான் இது குறித்து நாம் பேச முடியும். சட்டப்பேரவை தலைவர் எவ்வாறு செயல்படுகிறார் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சட்டப்பேரவை மரபை கடைப்பிடிக்கிறாரா? எதுவுமே கிடையாது. சட்டமன்றத்திலே அவருடைய ஜனநாயகத்தை பார்த்துவிட்டேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மேலும், சட்டப்பேரவைத் தலைவர் கட்சிக்காரர் போன்று பேசி வருகிறார். பொதுவாக பேச வேண்டும், அவர் பேசுவதில்லை. சட்டமன்றத்தை நடத்தக் கூடிய அதிகாரத்தை மட்டுமே கொடுத்துள்ளோம். சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்கள், முதலமைச்சர்தான் பதில் கொடுக்கவேண்டும்; ஆனால் சட்டப்பேரவை தலைவரே பதில் கொடுத்து விடுகிறார்.
நாங்கள் அந்தந்த இலாகா அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்றால்தான் எதிர்பார்க்கிறோம். அவரிடம் இருந்து பதில் வந்தால்தான் மக்களிடம் போய் சேரும். ஆனால், எல்லாம் பிரச்சினையையும் சட்டப்பேரவை தலைவரை எடுத்துக்கொண்டார். சட்டப்பேரவை மரபை கடைப்பிடிக்காத ஒரு தலைவர்தான், தற்பொழுது உள்ள சட்டப்பேரவை தலைவர். எனவே, சட்டப்பேரவை தலைவர் பேச்சை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. நடுநிலையாக இருந்தால் அவரை பற்றி பேசமுடியும். ஆனால், அதிமுகவை பொறுத்தவரை சட்டப்பேரவையையும், சட்டப்பேரவைத் தலைவரையும் மதிக்கிறது” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அமலாக்கத் துறையைச் சார்ந்த ஒருவர் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற கேள்விக்கு, “எங்கு தவறு நடந்தாலும் தவறு தவறுதான். யார் குற்றம் புரிந்தாலும், குற்றம் குற்றம்தான். அதில் சட்டம் கடமை செய்வதில் எந்தத் தவறும் இல்லை” என்றார்.
மேலும் அவர், “அதிமுக நிர்வாகிகள் ஏற்கெனவே நான் கொடுத்த ஆலோசனையின்படி சென்னை மாநகரப் பகுதி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் சிரமப்படுகிறார்களோ, அங்கெல்லாம் மக்களுக்கு தேவையான உதவியை செய்து வருகின்றனர்” என்றார்.
சட்டப்பேரவை மசோதாக்களை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியது குறித்த கேள்விக்கு, “உச்ச நீதிமன்றமே இறுதி தீர்ப்பு கொடுத்துவிட்டது, இதில் யாரும் ஆலோசனை கூற முடியாது. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளை, தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்” என்றார்.
மேலும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, “அண்ணாமலையிடம்தான் மெச்சூரிட்டி என்றால் என்னவென்று கேட்க வேண்டும். அவரை கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அவருக்கு என்ன மெச்சூரிட்டி இருக்கிறது என்று அவரைத்தான் கேட்கவேண்டும்” என்று கூறினார்.
முன்னதாக, “தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள். அதனால் ஒரு தனி மனிதத் தவற்றை கட்சியோடும் தலைவர்களுடன் ஒப்பிடுகின்றனர். தமிழகம் இப்படியான அரசியல்வாதிகளைக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது தமிழகத்தின் சாபக்கேடு அந்த சாபக்கேட்டை 2026-ல் பாஜக விலக்கும்” என்று அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours