ஹைதராபாத்தில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி எம்எல்சி கவிதா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளான எம்எல்சி கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப் பதிந்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி கலால் கொள்கை முறைகேடுகள் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன்களுக்கு எதிராக கவிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எம்எல்சி கவிதாவின் வீட்டில் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) அதிகாரிகள் இன்று பிற்பகல் முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது கவிதா மற்றும் அவரது உதவியாளர்கள் செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக ஹைதராபாத் நகரின் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு ஒருநாள் முன்னதாக பிஆர்எஸ் எம்எல்சி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு பிஆர்எஸ் தலைவர் கிரிஷாங்க் கண்டனம் தெரிவித்துள்ளார். கே.சந்திரசேகராவுக்கு எதிரான தேர்தலில் போராட பாஜகவுக்கு அமலாக்கத்துறை தேவை என அவர் எக்ஸ் தளத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours