சிஏஏ அமலுக்கு பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு!

Spread the love

சென்னை: “இந்திய நாட்டின் குடியுரிமை சட்டம் என்கிற சட்டத்தின் மூலம் மக்களைப் பிளவுபடுத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ தேமுதிக என்றைக்கும் ஏற்காது” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மதத்தால், மொழியால் சாதியால், உணர்வால் நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளாக ஒற்றுமையாக இணைந்து, உலகிலயே கலாச்சாரம் நிறைந்த நாடாக மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும், நமது இந்திய நாட்டின் குடியுரிமை சட்டம் என்கிற சட்டத்தின் மூலம் மக்களைப் பிளவுபடுத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றைக்கும் ஏற்காது.

இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமையையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவது மிக மிக முக்கியமான ஒன்று. எனவே இந்தச் சட்டத்தின் முழு விவரத்தையும், அனைத்து மக்களுக்கும் எளிதாகப் புரியும் வண்ணம், இந்தச் சட்டம் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும் என்கின்ற உத்தரவாதத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், அனைத்து மக்களிடையே இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ள தன்மை மற்றும் வழிமுறைகளையும், எப்படிப்பட்ட சட்டங்களை அறிவிக்கப் போகிறார்கள் என்றும், அதை எப்போது அமல்படுத்தப் போகிறார்கள் என்றும், இந்தச் சட்டம் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமா? என்றும் வெளிப்படையாக, வெள்ளை அறிக்கையாக மத்திய அரசு விளக்கம் தர வேண்டும். அப்போது தான் இந்தச் சட்டம் ஏற்புடையதா, இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும். அதுவரை இந்தச் சட்டத்தை தேமுதிக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது” எனத் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours