ஜனவரி 28-ம் தேதி திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!

Spread the love

மக்களவை தேர்தல் தொடர்பான முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை திமுக – காங்கிரஸ் இடையே ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மாநில தேர்தல் ஆணையங்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, நேற்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தேச தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

அதாவது ஏப்ரல் 16-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடத்தப்படலாம் என்ற உத்தேச தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தலுக்கு, இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே ஜனவரி 28-ம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டணிக் கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இம்முறை அதற்கும் குறைவாகவே தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கூடுதலான தொகுதிகளை கேட்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 28-ம் தேதி அதற்கான விடை தெரிந்துவிடும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours