மத்திய சென்னை, தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக செயல் வீரர்கள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. சோழிங்கநல்லூரில் நடைபெற்ற தென் சென்னை மாநாட்டுக்கு, கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்து, கட்சியினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற மத்திய சென்னை மக்களவைத் தொகுதி செயல் வீரர்கள் மாநாட்டில் பங்கேற்று அண்ணாமலை பேசியதாவது:
வரும் மக்களவைத் தேர்தலில் மோடி நிச்சயம் வெற்றி பெறுவார். நாடு முழுவதும் பெருநகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால், தமிழகத்தின் தலைநகரான சென்னை, குப்பை மாநகரமாக இருக்கிறது. இந்த ஆண்டு தூய்மை இந்தியா பட்டியலில் சென்னை 199-வது இடத்துக்குச் சென்றிருக்கிறது. காரணம், சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளையும், 3 குடும்பங்கள் ஆட்சி செய்வதுதான்.
பாஜக ஆட்சிக்கு வராவிட்டால், தமிழகத்தின் முழு கட்டமைப்பையும் திமுகவின் குடும்ப ஆட்சி கரையான்போல செல்லரித்துவிடும். குடும்ப ஆட்சி, சாதி, லஞ்சம், அடாவடி ஆகிய 4 கால்கள் கொண்ட நாற்காலியில்தான் திமுக உட்கார்ந்திருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மோடியை ஏற்றுக்கொண்டு யாரெல்லாம் வருகிறார்களோ, அவர்களுக்கு கதவு திறந்திருக்கும்.வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம். பாஜகவினர் தேனீக்களைப்போல பணியாற்ற வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
தொடர்ந்து, பாஜகவினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை அண்ணாமலை வழங்கினார். அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம், சுமதி வெங்கடேசன், மாவட்டத் தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ், டால்பின் ஸ்ரீதர், தனசேகர் பங்கேற்றனர்.
+ There are no comments
Add yours