பாஜகவுடன் இணைகிறதா சரத்குமாரின் ச.ம.க ?!

Spread the love

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தனது சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் சரத்குமார் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்கான சிக்னலை சரத்குமார் கொடுத்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையிலும், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. திமுகவை பொறுத்தவரை, அதன் கூட்டணி பலமாகவே உள்ளது. ஆனால், அதிமுகவும் – பாஜகவும் பிரிந்த நிலையில், அந்தக் கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்க படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் அதிமுகவுக்கு சில சிறுபான்மைக் கட்சிகளும், சிறிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2 நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. ஆனால் அக்கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. அதனால் இந்த முறையும் அதிமுகவுக்கு சரத்குமாரின் சமக ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரத்குமார் இந்த தடவை தனது ரூட்டை மாற்றியுள்ளதாக தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுடன் சரத்குமார் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முதலாவது தீர்மானம், நாடாளுமன்றத் தேர்தலில் சமக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சரத்குமாருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர், தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை முழுமையாக வரவேற்கிறோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பட்ஜெட்டை ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்ற்றப்பட்டுள்ளதால் பாஜகவுக்கு ஆதரவான நிலைபாட்டை சமக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த முறை பாஜக தலைமையிலான கூட்டணியில் சமக இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பிரபலமான கட்சிகள் இடம்பெறாத நிலையில், தற்போது சமகவும் அதிமுகவுக்கு டாட்டா காட்ட சிக்னல் கொடுத்திருப்பது அக்கட்சி தலைமையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours