மத்திய அரசு பணி தொடங்கி நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் வரை சமூகநீதி என்பது இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வி.பி.சிங்கின் காலம் போன்ற வசந்தகாலம் வர வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை மாநில கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையை முதல்வர் ஸ்டாலின், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங்கின் துணைவியார் சீதா குமாரி உள்ளிட்டோர் இணைந்து திறந்து வைத்தனர்.
பின்னர் கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் அனைவரும் கலந்துகொண்டனர். அதில், சிறப்பு விருந்தினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவுபரிசு வழங்கி சிறப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் வி.பி.சிங் பேச்சு இருக்காது. பெரியார் மண்ணில் வி.பி.சிங்குக்கு முதல் முறையாக சிலை வைப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை. நாங்களும் வி.பி.சிங் குடும்பத்தினர் என்பதில் பெருமை கொள்கிறோம்.
இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கும் சமூக நீதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் வி.பி.சிங்குக்கு காட்ட வேண்டிய நன்றியைக் காட்டி இருக்கிறோம். பிரதமர் பதவி போனாலும் கவலைப்படாமல் கொள்கையில் உறுதியாக இருந்தவர் வி.பி.சிங்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘’ மத்திய அரசு பணி தொடங்கி நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் வரை சமூக நீதி என்பது இல்லாமல் போய்விட்டது. சமூகநீதி பயணத்தில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். எங்கெல்லாம் புறக்கணிப்பு, தீண்டாமை, அநீதி உள்ளதோ அதைத் தீர்க்க வேண்டிய மருந்துதான் சமூகநீதி. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இடஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும். இதைக் கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு அமைக்க வேண்டும். வி.பி.சிங் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது, மறக்காது’’ என்றார்.
+ There are no comments
Add yours