மீண்டும் கட்சி மாறும் நிதிஷ் !

Spread the love

பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் இன்று தனது அமைச்சரவையை மாற்றியமைத்து புதிய ஆட்சி அமைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தனது கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறார். பாஜக, காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளுடன் மாறிமாறி கூட்டணி அமைத்து அவர் ஆட்சி நடத்தி வருகிறார். இதனால் அவருக்கு ‘பல்து ராம்’ (அடிக்கடி கட்சி மாறுபவர்) என்ற புனைப் பெயரும் ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு பிஹாரில் நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வரானார். அதன் பிறகு பாஜகவுடன் அதிருப்தி ஏற்பட்டதால், 2022-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பிஹாரில் புதிய ஆட்சியை அமைத்தார்.

வரும் மக்களவை தேர்தலில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற நிதிஷ் குமார் விரும்பினார். எதிர்க்கட்சி தலைவர்கள் பலரது முயற்சியில் இண்டியா கூட்டணி உருவானது. இந்த கூட்டணி மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் குறித்து பல மாநிலங்களில் கூட்டங்களை நடத்தியது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் பெயரை மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி முன்மொழிந்தார்.

இதற்கு லாலு மற்றும் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் ஒப்புக் கொண்ட நிலையில், திடீரென குறுக்கிட்ட ராகுல் காந்தி, இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தாவை கேட்டு முடிவு செய்து கொள்ளலாம் என்றார். இதனால் கோபம் அடைந்த நிதிஷ் குமார், இண்டியா கூட்டணியில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்றார்.

தொடர்ந்து, இண்டியா கூட்டணி தலைவர்கள், மம்தா, அர்விந்த் கேஜ்ரிவால், லாலு ஆகிய தலைவர்களை நிதிஷ் குமார் சமீபத்தில் விமர்சித்தார்.

இந்நிலையில், பிஹாரில் 2 முறை முதல்வராக இருந்த கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இவர் பிஹாரில் மக்கள் தலைவர் என அனைத்து தரப்பு மக்களாலும் அழைக்கப்பட்டவர்.

பாஜகவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் எல்லாம் மக்களின் வாக்கு வங்கியை கவரும் வகையில் இருப்பதால், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவதுதான் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் நிதிஷ் குமாரிடம் வலியுறுத்தினர். இதனால் பாஜக ஆதரவுடன், பிஹாரில் புதிய ஆட்சியை அமைக்க நிதிஷ் குமார் முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நிதிஷ் குமார் பதவி விலகுவதற்கு பதிலாக, அவரது அமைச்சரவையில் இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள அமைச்சர்களை மாற்றிவிட்டு பாஜக எம்எல்ஏக்களை சேர்க்கும் சாத்தியங்கள் பற்றி பாஜக ஆலோசித்து வருகிறது. இதற்காக பிஹாரில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதங்கள் பாஜக எம்எல்ஏக்களிடம் இருந்து பெறப்பட்டு முதல்வர் நிதிஷ் குமாருக்கு அனுப்பப்படுகிறது.

இன்று காலை 10 மணியளவில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் முதல்வர்நிதிஷ் குமார் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பிறகு பாஜக ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரை சந்தித்து புதிய அரசை இன்று மாலை அமைப்பார் என கூறப்படுகிறது.

மீண்டும் பதவியேற்பாரா?- மீண்டும் முதல்வராக பதவி ஏற்பது அவசியம் என சட்ட நிபுணர்கள் தெரிவித்தால் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார். இல்லை யென்றால் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் அமைச்சர்களுக்கு பதிலாக பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் துணை முதல்வர்களாவும், அமைச்சர்களாகவும் பதவி ஏற்பர் எனத் தெரிகிறது.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய, பிஹார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி, ‘‘அரசியலில் எந்த கதவும் மூடப்படுவதில்லை. தேவைப்பட்டால் திறக்கப்படும்’’ என்றார்.

இண்டியா கூட்டணியில் இருந்து நிதிஷ் வெளியேறுவது பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஐக்கிய ஜனதா தளம் வலுவான கட்சி. அவர்களின் நோக்கம் வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை வீழத்துவதுதான்.

எங்கள் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறுவது குறித்து எனக்கு தகவல் இல்லை. அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். பேசவும் முயன்றேன். பதில் இல்லை. நிதிஷ் குமார் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை’’ என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours