முன்னாள் முதல்வர் கமல்நாத் மகனுடன் பாஜகவில் இணைகிறார்!

Spread the love

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், மகன் நகுல்நாத் எம்.பியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பிரதமராவார் என்ற முழக்கத்துடன் பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்திய அளவில் பாஜகவிற்கு எதிராக ராகுல் காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக பாஜக உற்சாகமடைந்துள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் பலர் விலகி வருகின்றனர். பிப்.12-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு தற்போது மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் தனது மகனுடன் பாஜகவிற்கு தாவுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல்நாத் எம்.பி பாஜகவில் சேரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கமல்நாத்திடமிருந்தோ அல்லது நகுல்நாத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ மறுப்பு வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளரும், கமல்நாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகருமான நரேந்திர சலுஜா, போபாலில் உள்ள முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் புகைப்படத்தை வெளியிட்டு, அதற்கு “ஜெய் ஸ்ரீராம்” என்று தலைப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சிந்த்வாராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான நகுல் நாத், எக்ஸ் பக்கத்தில் தனது சுயவிவர குறிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours